7 ஒருங்கிணைந்த சேவைகளில் இணைத்துக்கொள்ள 1 பரீட்சை

அரச சேவைகளின் சில பதவிகளுக்காக ஒரு பரீட்சையை மாத்திரம் நடத்த தீர்மானம்

by Staff Writer 08-03-2020 | 9:43 AM
Colombo (News 1st) எதிர்வரும் காலங்களில் 7 ஒருங்கிணைந்த சேவைகளில் இணைத்துக் கொள்வதற்கு ஒரு பரீட்சையை மாத்திரம் நடத்துவதற்கு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. பொது நிர்வாகம், கணக்கியல் சேவை, திட்டமிடல் சேவை, கட்டடக் கலை, அறிவியல் சேவை மற்றும் பொறியியல் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் இணைத்துக்கொள்வதற்கு ஒரு தேர்வுப் பரீட்சையை நடத்தவுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இதற்கான யோசனைத்திட்டம், அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். குறித்த அனைத்து சேவைகளுக்கும் ஆட்சேர்ப்பிற்காக தற்போது வெவ்வேறான பரீட்சைகள் நடைபெறுகின்றன. இதற்காக மேலதிக செலவுகள் ஏற்படுவதுடன், நேரம் வீணடிக்கப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. புதிய திட்டத்தின் பிரகாரம், நுண்ணறிவு மற்றும் பொது அறிவு பரீட்சைகள் அனைத்து விண்ணப்பதாரிகளிலும் பரீட்சிக்கப்படுவதுடன், தகுதிவாய்ந்தோருக்கு அனைத்து சேவைகளுக்குமான ஓர் பரீட்சை நடத்தப்படவுள்ளது.