முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் விடுதலை

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் விடுதலை

by Staff Writer 07-03-2020 | 3:36 PM
Colombo (News 1st) விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், குற்றச்சாட்டுகளிலிருந்து பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்து நேற்று (06) உத்தரவிட்டார். இலங்கை கடற்படையினரைத் தாக்குவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ராடார் கருவியை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, முள்ளியவளையைச் சேர்ந்த தமிழ்புலவன் என்றழைக்கப்பட்ட காளிமுத்து மகேந்திரன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இலங்கை கடற்படையினரைத் தாக்கியளிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ராடார் கருவியை வழங்கினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நெளுக்குளம் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டு 2 ஆண்டுகள் புனர்வாழ்வளிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் உண்மை விளம்பல் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. வழக்குத் தொடுனர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தியதுடன், பிரதிவாதி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி மு.ரெமிடியஸ் முன்னிலையாகியிருந்தார். உண்மை விளம்பல் விசாரணையின் நிறைவில் காளிமுத்து மகேந்திரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நம்பகரமானது இல்லை என நீதிமன்றம் தீர்மானித்தது. சட்ட மா அதிபர் சார்பில் இன்று மன்றில் முன்னிலையான அரச சிரேஷ்ட சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன், எதிரிக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீதான விளக்கத்தை முடிவுறுத்திக்கொள்வதாக நேற்று அறிவித்தார். அதற்கமைய, பிரதிவாதியை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.