கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் சுமார் 10,000 பேர் பங்கேற்பு

by Staff Writer 07-03-2020 | 4:58 PM
Colombo (News 1st) கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவுப் பாலமாகத் திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று மாலை ஆரம்பமானது. தமிழகம் - இராமேஸ்வரத்திலிருந்து மூவாயிரத்திற்கும் அதிகமானோரும் இலங்கையில் இருந்து சுமார் 7,000 பேரும் திருவிழாவில் கலந்துகொண்டனர். யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க ஆண்டகை ஆகியோர் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருவிழாவில் யாழ், சிவகங்கை, தஞ்சாவூர் மறைமாவட்டங்களின் குருமுதல்வர்கள் உட்பட இலங்கை, இந்திய குருக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி பிரேம் சங்கர், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், முப்படைகளின் தளபதி ரியர் அட்மிரல் ரவி விஜயகுணரத்ன, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ருவன் வணிகசூரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேவேளை, கச்சத்தீவு திருவிழாவிற்காக சென்றவர்களின் படகுகள் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. மன்னாரில் இருந்து சென்ற 10 படகுகளே காணாமற்போயுள்ளன. கரையில் படகுகளை மீனவர்கள் உரிய முறையில் நிறுத்தி வைக்காமையே இதற்கான காரணம் என கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார். படகுகளைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.