ETI நிறுவன முறைகேடு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முதன்முறையாகக் கூடியது

by Staff Writer 06-03-2020 | 7:45 PM
Colombo (News 1st) ETI Finance நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு இன்று முதன்முறையாகக் கூடியது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் K.T.சித்ரசிறி தலைமையிலான இந்த ஆணைக்குழுவில் ஓய்வு பெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத், சிரேஷ்ட வங்கி அதிகாரியான D.M.குணசேகர ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். ETI நிறுவனத்தில் இடம்பெற்ற தவறான நடவடிக்கைகள், முறைகேடு மற்றும் மோசடி தொடர்பில் ஆராய்வது இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான குறிப்பிட்டார். அந்த நிறுவனம் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் மற்றும் அதன் பின்னர் சொத்துப் பரிமாற்றம் உரிய முறையில் இடம்பெற்றதா என்பது தொடர்பில் ஆராயுமாறு பிரியந்த நாவான ஆணைக்குழுவிற்கு அறிவித்தார். இது தொடர்பில் மத்திய வங்கியின் ஒழுங்கு முறைகள் பின்பற்றப்பட்ட விதம் குறித்து ஆராயுமாறும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைய, ETI நிறுவனத்தின் நிலைமையை வௌிப்படுத்துவதற்காக நிறுவனத்தின் பதிவாளரை முதலாவது சாட்சியாளராக அழைக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார். தமது நிறுவனம் தொடர்பிலான விடயங்களைத் தெரிவிப்பதற்கு ஆணைக்குழுவிடம் அனுமதி கோருவதாக, ETI நிறுவனத்தின் சொத்துக்களை கொள்வனவு செய்த பென் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷவேந்திர பெர்னாண்டோ கூறினார். எவ்வாறாயினும், ETI நிறுவனம் சார்பில் எவரும் ஆஜராகாத நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.