புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் குமார வெல்கம

by Staff Writer 06-03-2020 | 8:37 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் குமார வெல்கம, புதிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனும் புதிய அரசியல் கட்சியினை இன்று ஆரம்பித்தார். தூய்மையான பண்டாரநாயக்கவின் கொள்கை எனும் தொனிப்பொருளில் குமார வெல்கம தலைமை தாங்கும் புதிய அரசியல் கட்சியினை ஆரம்பிக்கும் நிகழ்வு புறக்கோட்டையிலுள்ள மண்டபமொன்றில் நடைபெற்றது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர். கட்சியின் கொள்கை இதன்போது வௌியிடப்பட்டது. தமக்கெதிரான நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் குமார வெல்கம இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்தார். நிகழ்வில் அவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
நான் மஹிந்தவின் வலது கையைப்போன்று செயற்பட்டவன். நீங்கள் தோல்வியடைந்ததற்கு காரணங்கள் உள்ளன என 2015ஆம் ஆண்டு தோல்வியின் பின்னர் அவரை சந்தித்த முதல் சந்தர்ப்பத்திலேயே நான் கூறினேன். குடும்பத்தினர் உங்களை சூழ்ந்து கொண்டிருப்பது முதலாவது விடயம். அவர் அதனை ஏற்றுக்கொண்டார். புதிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறிய தினத்திற்கு முன்னர், எமது மொட்ரேகோ சரத்சந்திர என்னிடமும் உபுலாங்கனியிடம் ஆலோசனை பெற்று இந்தக் கட்சியை பதிவு செய்வதற்காக ஆவணங்களை சமர்ப்பித்தோம். ஆகவே, எம்மால் இதனைப் பயன்படுத்த முடியும். இலகுவானதல்ல. குடும்பவாதத்திற்கு எதிராக, ராஜபக்ஸ சக்திக்கு எதிராக நாம் போராடுவதாயின் நாம் அச்சமின்றி முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்கள் மொட்டிற்கு வாக்களிக்க மாட்டார்கள். மொட்டிற்கு வாக்களிப்பதற்கு விருப்பமின்றி உள்ளனர். பிரசன்ன ரணதுங்க, ரொஷான் ரணசிங்க போன்றோர் எவ்வாறு பேசுகின்றார்கள் என்பதைக் கண்டீர்கள் அல்லவா?

ஏனைய செய்திகள்