கருங்கல் தொழிற்துறைக்கு வரையறை: குழு நியமனம்

கருங்கல் தொழிற்துறைக்கு வரையறை ஒன்றை திட்டமிட குழு நியமனம்

by Staff Writer 06-03-2020 | 4:32 PM
Colombo (News 1st) கருங்கல் தொழிற்துறைக்கு அனுமதி வழங்கல் மற்றும் வரி அறவிடலுக்கு முறையான வரையறை ஒன்றை திட்டமிடுவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்துறையுடன் தொடர்புடையவர்களை உள்ளடக்கி , காணி ஆணையாளர் நாயகத்தின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் காணிகளில் கருங்கல் தொழிலில் ஈடுபடுவோருடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த குழு நியமிக்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார். அனுமதி பெறும் போதும் வரி செலுத்தும் போதும் அறவிடப்படும் கட்டணங்களை செலுத்த பல அரச நிறுவனங்களை நாட வேண்டியுள்ளதால், இதற்கான உரிய நடைமுறையை ஏற்படுத்துமாறு கருங்கல் தொழிற்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கருங்கல் தொழிற்துறை தொடர்பில் அறவிடப்படும் வரி முறைமை மீள பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இதன்போது பிரதமர் கூறியுள்ளார். கருங்கல் விலை அதிகரிப்பானது அபிவிருத்தி செயற்றிட்டத்திற்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.