6000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது

by Staff Writer 05-03-2020 | 9:37 AM
Colombo (News 1st) தென் கடற்பிராந்தியத்தில் கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்த படகில் இருந்து சுமார் 400 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 100 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 6000 மில்லியன் ரூபாவாகும். இந்தப் போதைப்பொருட்களுடன் 28 சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். சந்தேகநபர்களில் பாகிஸ்தான் மற்றும் ஈரானிய பிரஜைகளும் அடங்குகின்றனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய தென் கடற்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது. இதனடிப்படையில், 25 நாட்களுக்கும் மேலாக கடற்படையின் அதிவேக தாக்குதல் கப்பல்களான சயுரல மற்றும் சமுதுர ஆகிய கப்பல்கள் தென் கடலில் பயணிக்கும் படகுகளை செய்மதி தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்தன. இந்த நிலையில், தென்கடற்பிராந்தியத்தில் 600 கடல்மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த படகில் இருந்து சுமார் 400 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 100 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், படகில் இருந்த 28 வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.