மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் கொரோனா

மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் கொரோனா வைரஸ்

by Bella Dalima 05-03-2020 | 4:12 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் வைரஸ் தொற்றுக்குள்ளான வளர்ப்பு நாயொன்று அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய, முதன்முறையாக மனிதரிடமிருந்து விலங்குகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு வளர்ப்பு நாய்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஹாங்காங்கில் கொரோனா தொற்றுக்குள்ளான 104 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றினால் அங்கு இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகவில்லையெனவும் அதன் மூலம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் சீன வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே அமெரிக்காவின் வாஷிங்டன், புளோரிடா மாநிலங்களைத் தொடர்ந்து கலிஃபோர்னியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் முதல் மரணம் பதிவாகியுள்ள நிலையில் கலிஃபோர்னியா மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வாஷிங்டன் மற்றும் புளோரிடா மாநிலத்தில் கடந்த வார இறுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு வௌ்ளை மாளிகை நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவின் 16 மாநிலங்களில் இதுவரை 150 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சீனாவின் 80,000 பேர் உள்ளடங்கலாக உலகளாவிய ரீதியில் 92 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மூவாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் மூடுவதற்கு இத்தாலி தீர்மானித்துள்ளது. ஈரானில் புதிதாக 15 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டில் கொரொனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32 ஆல் அதிகரித்து 85 ஆகப் பதிவாகியுள்ளது.