காணாமற்போனோருக்கான அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு 2 வருடங்கள்: தற்காலிகப் பட்டியல் தயாரிப்பு

by Staff Writer 05-03-2020 | 6:18 PM
Colombo (News 1st) காணாமற்போனோரின் உறவினர்களின் குடும்பங்களைப் பாதுகாத்து, அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக அலுவலகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். காணாமற்போனவர்களது மொத்த எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் உறுதியாக மதிப்பிடப்படவில்லை எனவும், கடந்த காலங்களில் இடம்பெற்ற விசாரணைகளின் போது, விசாரணைக்குழுக்கள் அது தொடர்பில் மாறுபட்ட எண்ணிக்கைகளை அறிக்கையிட்டுள்ளதாகவும் அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் காணாமற்போனோர் பற்றிய அலுவலகமானது சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழிகள் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளை அவதானித்தல், அவர்களுக்கு உதவுதல் போன்ற விடயங்களில் முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். ஆயுத நடவடிக்கைகளில் காணாமற்போன முப்படையினர் உள்ளடங்கலாக, தற்போது இருக்கும் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு காணாமற்போன மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் தற்காலிகப் பட்டியலைத் தயாரித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்கள் அந்த தற்காலிகப் பட்டியலில் உள்ளார்களா என்பதனை உறுதிப்படுத்துமாறு அவர்களின் குடும்பங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகுவதற்கான அரசாங்கத்தின் சமீபகால முடிவானது, காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மத்தியில் தமது எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் வினைத்திறனாக செயற்படுவதற்கு அரசாங்கத்தின் பாரிய ஒத்துழைப்பு தேவை எனவும், காணாமற்போன மற்றும் காணாமலாக்கப்பட்ட குடும்பங்கள் சார்பாக வாதிடுவதற்கு தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.