கச்சத்தீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

by Staff Writer 05-03-2020 | 5:51 PM
Colombo (News 1st) கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளையும் (06) நாளை மறுதினமும் (07) நடைபெறவுள்ளது. திருவிழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கச்சத்தீவில் ஒன்றுகூடவுள்ளனர். அவர்களுக்கான அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார். இம்முறை திருவிழாவில் இலங்கையைச் சேர்ந்த 10,000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 3000 பக்தர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இந்தியாவில் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து சுமார் 3000-இற்கும் மேற்பட்ட பக்தர்கள் பதிவு செய்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், பக்தர்களை ஏற்றிச்செல்வதற்காக விசைப்படகுகளும் நாட்டுப் படகுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் பயணிக்கும் படகுகளின் பாதுகாப்பு நிலை தொடர்பில் தமிழக மீன்பிடித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். பக்தர்கள் இராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகளில் அனுப்பி வைக்கப்படவுள்ள நிலையில், படகுகளை தயார் செய்வதற்காகவும் பக்தர்கள் நிற்பதற்கான பந்தல் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாலும் இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்றிலிருந்து 5 தினங்களுக்கு கடலுக்குச்செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.