ஓரணியாக இணைந்து மாற்றத்தைக் காண்பது காலத்தின் தேவை

ஓரணியாக இணைந்து மாற்றத்தைக் காண்பது காலத்தின் தேவை: வீ.ஆனந்தசங்கரி அறிக்கை

by Staff Writer 05-03-2020 | 5:19 PM
Colombo (News 1st) தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் இந்தியாவிலிருந்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதற்கு பிறகும் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருக்குமாயின் அது தமிழ் மக்களின் சாபக்கேடு என வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். மக்கள் தமது பிரச்சினைகளைத் தாமே போராடி, தாமே தீர்த்துக்கொள்ள வேண்டுமாகவிருந்தால் மக்கள் பிரதிநிதிகள் எதற்காக எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். 1972 ஆம் ஆண்டு முப்பெரும் தலைவர்களான தந்தை செல்வா, ஜி.ஜி. பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தார்மீகக் கடமையும் பொறுப்பும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் அனைத்து அமைப்பினரும் ஓரணியாக இணைந்து ஒரு மாற்றத்தைக் காண்பது காலத்தின் தேவை எனவும் அதற்காக அணி திரள வேண்டியது அவசியம் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.