கடலில் மறைத்து வைக்கப்பட்ட 15 கிலோ தங்கம் மீட்பு

இலங்கையிலிருந்து கடத்தி கடலில் மறைத்து வைக்கப்பட்ட 15 கிலோகிராம் தங்கம் தமிழக கடற்படையால் மீட்பு

by Staff Writer 05-03-2020 | 7:26 PM
Colombo (News 1st) இலங்கையில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட 15 கிலோகிராம் தங்கத்தை தமிழக கடற்படையினரும் மத்திய சுங்க வருவாய்த்துறை அதிகாரிகளும் இணைந்து மீட்டுள்ளனர். இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் தங்கம் கடத்தி வருவதாக இந்திய மத்திய சுங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்று முன்தினம் (03) மண்டபம் - வேதாளை கடற்பகுதியை கண்காணித்துக்கொண்டிருந்த போது அங்கு படகில் வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்தபோது அவர்கள் முரணான தகவல்களை வழங்கியுள்ளனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, தங்கத்தைக் கடலில் போட்டுவிட்டு குறிப்பிட்ட பகுதியை GPS-இல் பதிவு செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கைது செய்யப்பட்ட இருவரையும் மண்டபம் அழைத்துச்சென்று நேற்று காலை மணலி தீவுப் பகுதியில் போடப்பட்ட தங்கத்தை இந்திய கடற்படையின் உதவியுடன் கடலுக்குள் சென்று எடுத்து வந்தனர். இதனை அடுத்து, மீட்கப்பட்ட தங்கத்தை அளவிடும் போது சுமார் 15 கிலோகிராம் இருந்ததாகவும் இதன் சர்வதேச மதிப்பு சுமார் 7 கோடி இந்திய ரூபா எனவும் தெரியவந்துள்ளது. மண்டபம் - மரைக்காயர் பட்டிணம் பகுதியைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.