அமெரிக்க தேர்தலிலிருந்து மற்றொருவர் விலகினார்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகினார் Michael Bloomberg

by Chandrasekaram Chandravadani 05-03-2020 | 8:34 AM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து மைக்கல் ப்ளூம்பர்க் (Michael Bloomberg)விலகியுள்ளார். முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அவர் கூறியுள்ளார். நியூயோர்க் நகரின் முன்னாள் மேயரான Michael Bloomberg பிரசார நடவடிக்கைகளுக்காக 409 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை செலவிட்டதன் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடிப்பதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தாம் போட்டியில் இணைந்துகொண்டதாகவும் அதே காரணத்துக்காக போட்டியில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவாகும் போட்டியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன், ஒக்லஹோமா, அர்க்கன்சாஸ், அலபாமா, டென்னஸ்ஸீ, வடக்கு கெரோலினா மற்றும் வேர்ஜினியா உள்ளிட்ட 10 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். Amy Klobuchar உள்ளிட்ட மூவர் ஏற்கனவே போட்டியில் இருந்து விலகி ஜோ பைடனுக்கு ஆதரவளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பேர்ணி சன்டெர்ஸ் கலிபோர்னியா உள்ளிட்ட 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே, சூப்பர் டியூஸ்டே வெற்றியானது ஜோ பைடனுக்கு சிறந்த மீள்வருகை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.