முதலாவது தனிமைப்படுத்தும் மத்திய நிலையம் அறிவிப்பு

ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக மாற்றம்

by Staff Writer 04-03-2020 | 5:14 PM
Colombo (News 1st) ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை முதலாவது தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. ஈரான், தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக இந்த பிரிவு பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான தேசிய செயற்றிட்டம் பாதுகாப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை, தனிமைப்படுத்தி வைப்பதற்கான சிறந்த இடம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க குறிப்பிட்டார். இங்கு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தங்கவைக்கப்படமாட்டார்கள் எனவும், கணகாணிப்பின் கீழ் இருக்க வேண்டியவர்கள் மாத்திரமே இங்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் கூறினார். தனிமைப்படுத்தப்படும் காலப்பகுதியில் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.