ஹற்றன் நகரில் மட்டுப்படுத்தப்படும் நீர் விநியோகம்

ஹற்றன் நகருக்கான நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானம்

by Staff Writer 04-03-2020 | 2:14 PM
Colombo (News 1st) ஹற்றன் நகருக்கு நீர் விநியோகிக்கப்படும் ஹற்றன் - சிங்கமலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால், ஹற்றன் நகருக்கான நீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. கடந்த சில நாட்களாக. சிங்கமலை வனப்பகுதியில் சிலர் தீ வைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக, குறித்த நீரேந்து பிரதேசம் வற்றிப்போயுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தற்போது காணப்படும் நீரின் அளவு, குடிநீர் தேவைக்கு போதுமானதாக இல்லையென்பதால், ஹற்றன் - டிக்கோயா இன்வரி பகுதியிலிருந்து பெறப்படும் நீரை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை 5 மணித்தியாலங்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மலையகப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக வறட்சியான வானிலை நிலவுவதுடன், நீரேந்து பகுதிகளை அண்மித்த வனப்பகுதிகளில் தீ வைக்கப்படுவதால் நீர் வற்றிப்போயுள்ளது. இதன்காரணமாக ஹற்றன் உள்ளிட்ட அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போரும் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.