ரவி உள்ளிட்ட 12 பேருக்கு வௌிநாடு செல்லத் தடை

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 12 பேருக்கு வௌிநாடு செல்லத் தடை 

by Staff Writer 04-03-2020 | 5:38 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 12 பேர் வௌிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார். பிடியாணை பிறப்பிப்பது தொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதி உத்தரவிடப்படவுள்ளது. 12 சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர நீதவானிடம் கோரிக்கை விடுத்தார். சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கை தொடர்பில் உத்தரவிட முன்னர், ரவி கருணாநாயக்க தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஷி அரசகுலரத்ன நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். எனினும், கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இந்த கோரிக்கையை நிராகரித்தார். சந்தேகநபர்களுக்கு பிடியாணை அல்லது அறிவித்தல் விடுப்பதற்கு முன்னர் சாட்சி விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்த நீதவான், முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பெண் அதிகாரி தர்மலதா சஞ்ஜீவனி கெப்பட்டிபொலவிடம் சாட்சியம் பெற்றுக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பிலான ஏனைய சந்தேகநபர்களாக கசுன் பலிசேன, ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ், ரஞ்சன் ஹுலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், அஜான் புஞ்ஜிஹேவா, புத்திக சரத்சந்திர,சங்கரப்பிள்ளை பதுமநாதன், இந்திக சமன்குமார ஆகியோரும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனமும் பெயரிடப்பட்டுள்ளது.