உரத்தை உடனடியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

உரத்தை உடனடியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 04-03-2020 | 8:53 AM
Colombo (News 1st) எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான உரத்தினை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். தாமதமின்றி உரத்தினை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ள ஜனாதிபதி, விவசாயிகளை ஒருபோதும் அசௌகரியத்திற்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார். உரத்தினை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். உர இறக்குமதியின்போது எழும் பிரச்சினைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. உரத்தை விநியோகிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் நியமங்களைப் பரிசீலனை செய்யும் அறிக்கையை எதிர்வரும் 10 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார். இரசாயன உரங்களை பயன்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவசாய சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். சந்தையில் உள்ள தேவை மற்றும் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறைக்கு கூட்டு உர உற்பத்திகளை அதிகரிப்பதை காலந்தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயர் நியமங்களுக்கேற்ப உரத்தினை உற்பத்தி செய்யும் நாடுகளை அடையாளங்கண்டு உரம் இறக்குமதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நெற்பயிர்ச்செய்கை உட்பட வருடாந்தம் பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் அவற்றின் அளவுகளை சரியாக அறிந்து தேவையானளவு உரத்தினை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.