இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதில் ஆட்சேபனை இல்லை என நீதிமன்றம் அறிவிப்பு

by Staff Writer 04-03-2020 | 1:31 PM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பில் நீதிமன்றத்திற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவை மீறாது, மீள் ஏற்றுமதி குறித்து அந்நாட்டின் சுற்றாடல் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கம் எட்டப்பட்டதன் பின்னர் நகர்த்தல் பத்திரத்தினூடாக மன்றுக்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. கழிவுகள் அடங்கிய கொள்கலன்களின் உரிமையாளர் தமது நிறுவனம் என்பதால், உரிய விநியோக செயன்முறை இல்லாததன் காரணமாக அதனை மீள் ஏற்றுமதி செய்வதில் தமது நிறுவனத்துடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ள முடியாதுள்ளதாக சிலோன் மெட்டல் ப்ரொசசிங் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். எனினும் மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பில் தமது நிறுவனத்திற்கு ஆட்சேபனை இல்லை என வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஹேலிஸ் ப்றீ ஸோன் நிறுவனம் மன்றுக்கு இன்று அறிவித்தது. இதன்பிரகாரம் வழக்கை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர்களாக நீதிபதி A.H.M.D. நவாஸ் மற்றும் நீதிபதி அர்ஜூன் ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவு பிறப்பித்தது.