இத்தாலி, தென் கொரியாவிலிருந்து 2000 பேர் வருகை

இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து 2000 பேர் நாட்டிற்கு வருகை

by Staff Writer 04-03-2020 | 9:55 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து நாட்டை வந்தடைந்த 2000 இற்கும் அதிகமானோர் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் வசிக்கும் பிரதேசங்களிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்களின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கொடை தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் வைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், தடிமன், காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின், விமான நிலையத்தினூடாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தேவையான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அறிகுறிகள் ஏதும் தென்படாத பட்சத்தில், அவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்வதுடன் அப்பகுதிகளிலுள்ள சுகாதாரப் பணிப்பாளர் ஊடாக பொது சுகாதார பரிசோதகர்களினால் குறித்த நபர்கள் 14 நாட்களுக்கு கண்காணிக்கப்படவுள்ளதாக வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டிற்கு வருகைதந்து 14 நாட்களுக்குள் ஏனைய இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து நாட்டிற்கு வரும் அனைவரையும் பிரத்தியேக மத்திய நிலையங்களில் வைத்து கண்காணிப்பதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனை முன்னிட்டு மத்திய நிலையங்களை அமைக்கும் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கூறியுள்ளார். நாட்டை வந்தடைந்து 14 நாட்களுக்கு குறித்த பயணிகள் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்படவுள்ளதுடன், அறிகுறிகள் ஏதேனும் தென்படாத பட்சத்தில் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 19 பேர் அங்கொடை தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவு மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.