ஹோர்ட்டன் சமவெளியில் உயிரினங்களைத் திருடிய ரஷ்யர்கள் மூவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 03-03-2020 | 8:44 PM
Colombo (News 1st) பாரிய திருட்டு ஒன்று ஹோர்ட்டன் சமவெளியில் பதிவாகியுள்ளது. சந்தேகத்திற்கு இடமான மூன்று ரஷ்ய பிரஜைகள் கைது செய்யப்பட்டமையைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது. கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி ஹோர்ட்டன் சமவெளியில் உயிரினங்களை சேகரித்துக்கொண்டிருந்த மூன்று ரஷ்ய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் தங்கியிருந்த இடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அங்கிருந்த 23 இனங்களைச் சேர்ந்த 550 உயிரினங்கள் கைப்பற்றப்பட்டு நுவரெலியாவில் உள்ள விலங்கினங்கள் பாதுகாப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்த உயிரினங்களில் நத்தைகள், வண்டுகள் மற்றும் ஊர்வன உள்ளடங்குகின்றன. நாட்டிற்கு வருகை தந்த ரஷ்ய பிரஜைகள் யாழ்ப்பாணம் , சிகிரியா , தம்புளை, மாத்தறை மற்றும் கினிகத்தேனை ஆகிய பகுதிகளுக்கும் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் குறித்த பகுதிகளுக்கு பயணித்த வாடகை வாகனம் தற்போது பொலிஸாரிடம் உள்ளது. சந்தேக நபர்கள் இன்று நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.