பொதுத்தேர்தலில் வாக்களிக்க 1,62,63,885 பேர் தகுதி

பொதுத்தேர்தலில் வாக்களிக்க 1,62,63,885 பேர் தகுதி; கம்பஹா மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள்

by Staff Writer 03-03-2020 | 9:52 PM
Colombo (News 1st) நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வௌியிடப்பட்டதுடன், பொதுத்தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கு எதிர்வரும் 12 ஆம் திகதியில் இருந்து 19 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. புதிய பாராளுமன்றம் மே மாதம் 14 ஆம் திகதி கூடவுள்ளதாக நேற்றிரவு வௌியிடப்பட்ட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பொதுத்தேர்தலுக்காக 2019 ஆம் ஆண்டு பெயர்ப்பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், வாக்களிப்பதற்கு 1,62,63,885 தகுதி பெற்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் இம்முறை வாக்களிப்பதற்கு 17,85,964 பேர் தகுதி பெற்றுள்ளனர். இம்முறை குறைந்த வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்டமாக வன்னி தேர்தல் மாவட்டம் அமைந்துள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2,87,024 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டு தேர்தல் பெயர்ப்பட்டியலின் அடிப்படையில், காலி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 இலிருந்து 9 ஆகக் குறைவடைந்துள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை 8 இலிருந்து 9 ஆக அதிகரித்துள்ளது.