கொரோனா தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்

by Staff Writer 03-03-2020 | 10:00 AM
Colombo (News 1st) ​கொரோனா வைரஸ் தனித்துவமாக இருக்கின்றபோதிலும், சரியான நடவடிக்கைகளினூடாக அதனைக் கட்டுப்படுத்த முடியுமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் பரவல் கட்டுப்படுத்த முடியாத ஒன்றல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நாடுகள் விரைவாகவும் திறமையாகவும் அதற்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டால் கொரோனாவை ஒழிக்க முடியுமென சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதைத் தவிர வேறு தெரிவுகள் எவையுமில்லை எனவும் Tedros Adhanom Ghebreyesus குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், கடந்த சில தினங்களாக சீனாவில் புதிதாக கொரோனா தொற்று பரவும் வேகத்தைவிட 9 மடங்கு அதிக வேகத்தில் சீனாவிற்கு வௌியே பரவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனாவிற்கு வௌியே பாரியளவில் கொரானாவினால் பாதிப்புக்குள்ளான நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றினால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 18 இனால் அதிகரித்து 52 ஆக உயர்வடைந்துள்ளது. 1,835 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியின் வடக்கு பிரதேசத்திலுள்ள லம்பார்டி மற்றும் வெனேட்டோ ஆகியவற்றிலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதனைத் தவிர ஈரானில் 12 மேலதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன், மொத்தமாக தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஈரானிய ஆன்மீகத்தலைவரின் உயர்நிலை ஆலோசகர் ஒருவரும் அடங்குவதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 4 மேலதிக உயிரிழப்புக்கள் பதிவாகியதுடன், மொத்தமாக 6 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். உலகளாவிய ரீதியில் 70 நாடுகளில் 90,000 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 90 வீதமானோர் சீனாவில் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், சீனாவிற்கு வௌியே 8,800 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையில் 81 வீதமானவை ஈரான், தென்கொரியா, இத்தாலி, ஜப்பான் ஆகிய 4 நாடுகளிலேயே பதிவாகியுள்ளது.