நீருக்காக காத்திருக்கும் கிளிநொச்சி விவசாயிகள்

இரணைமடு குளத்தின் நீருக்காக காத்திருக்கும் கிளிநொச்சி விவசாயிகள்

by Staff Writer 03-03-2020 | 5:56 PM
Colombo (News 1st) உப உணவுப் பயிர் செய்கையை மேற்கொள்வதற்கு போதுமான நீர் கிடைப்பதில்லையென இரணைமடு குளத்தின் நீரை நம்பி வாழும் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டத்தின் திருவையாறு கிராமத்தை சேர்ந்த மக்கள் உப உணவு பயிர் செய்கையையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். பயிர் செய்கைக்கான நீர் ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை தமது பயிர் செய்கைக்கான நீர் வழங்கப்படவில்லை என செய்கையாளர்கள் தெரிவித்தனர். இரணைமடு குளத்தின் நீர் உரிய காலத்தில் திறக்கப்படாமையால் தாம் கடன்பெற்று மேற்கொண்ட பயிர் செய்கைகள் பாதிப்புறும் என விவசாயிகள் கவலை வௌியிட்டனர். இந்த விடயம் தொடர்பில் இரணைமடு குளத்தின் பொறியியலாளர் சத்தியசீலன் செந்தில்குமரனிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. கிளிநொச்சி மாவட்ட மேட்டு நிலப் பயிர் செய்கைக்கான கூட்டம் மாவட்ட செயலகத்தினால் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என இதன்போது அவர் தெரிவித்தார். மேட்டு நிலப் பயிர் செய்கைக்கான கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொறியியலாளர் மேலும் கூறினார். இதேவேளை, கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இரணைமடு குளத்தின் நீரைப் பயன்படுத்தி 15,163 ஏக்கர் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.