இந்தியாவிற்கும் கொரோனா பரவல்

இந்தியாவிற்கும் கொரோனா பரவல்: இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

by Bella Dalima 03-03-2020 | 6:08 PM
Colombo (News 1st) இந்தியா, ஜெர்மனி மற்றும் ஈரானில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உலகம் தற்போது எல்லை குறிக்கப்படாத பிரச்சினையில் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கிணங்க, இதுவரை 90,000 பேர் COVID-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் COVID-19 வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பீதியடையத் தேவையில்லையென பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஆயத்தங்கள் தொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன், சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் COVID-19 தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. மேலும், கிழக்கு லண்டனில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரித்தானியா புதிய பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தென்கொரியாவில் 5000 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.