சந்திரசேன உள்ளிட்டோரை மன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

S.M. சந்திரசேன உள்ளிட்ட 24 பேருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அறிவித்தல்

by Staff Writer 02-03-2020 | 7:30 PM
Colombo (News 1st) வனஜீவராசிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சர் S.M. சந்திரசேன உள்ளிட்ட 24 பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (02) அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. யானைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் இருவருக்குத் துப்பாக்கிகளை வழங்குவதற்காக பெறப்பட்ட அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காக அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை வனஜீவராசிகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யாதுரிமை எழுத்தாணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜூன் ஒபேசேகர உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அமைச்சரவையினால் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கு துப்பாக்கிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் யானைகளுக்கு மாத்திரமின்றி காடுகளில் வசிக்கும் ஏனைய உயிர்களுக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ள சுற்றாடல் சங்கத்தினர் குறித்த அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு துப்பாக்கிகள் விநியோகிக்கப்பட்டிருந்தால் அவற்றை மீளப்பெற உத்தரவிடுமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் S.M. சந்திரசேன, வனஜீவாரசிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர், வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட 24 பேர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.