பல்கலைக்கழக மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 02-03-2020 | 2:45 PM
Colombo (News 1st) நீதிமன்ற கட்டளையை மீறி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் எதிர்ப்பில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட இரண்டு பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 22 மாணவர்களும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சின் முன்னிலையில் கூடாரம் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரத்கருச்சே ஜீவரத்தன தேரர் உள்ளிட்ட 22 மாணவர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர். தேரர்கள் இருவர் மற்றும் மாணவர்கள் 20 பேரும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 27 ஆம் திகதி விதிக்கப்பட்ட உத்தரவை மீறி செயற்பட்டுள்ளதாக பொலிஸார் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளாதமையால், அதனை மாணவர்கள் அமைத்துள்ள கூடாரத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார். தாம் பிணையில் விடுவிக்கப்பட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக நீதிமன்ற உத்தரவை கருத்திற்கொள்ளாது அவர்கள் முன்வைத்த அறிவிப்பு அடங்கிய காணொளியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 21 மாணவர்களும் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டமை மற்றும் வீதியை மறித்தமை உள்ளிட்டசில குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.