கொரோனா: அமெரிக்காவில் முதலாவது மரணம்

கொரோனா வைரஸ்; அமெரிக்காவில் முதலாவது மரணம் பதிவு

by Chandrasekaram Chandravadani 01-03-2020 | 10:11 AM
Colombo (News 1st) அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தின் வட மேற்குப் பகுதியில் முதலாவது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது. வொஷிங்டனில் 50 வயதான ஒருவரே கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான உயிரிழப்புகள் மேலும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அனைத்தையும் எதிர்கொள்ள அமெரிக்கா தயாராகவுள்ளதாக கூறியுள்ளார். இத்தாலி மற்றும் தென் கொரியாவில் கொரோனா பரவியுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ள அமெரிக்கா, ஈரானுக்கு செல்வவதற்குத் தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அயர்லாந்து, ஈக்குவடோர் மற்றும் கத்தாரிலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் முதல்தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சீனாவைத் தவிர ஈரானிலேயே அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் என ஈரானிய சுகாதாரத் தரப்பினர், மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் வைரஸ் தொற்றினால் இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இதுவரை 1,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.