பாகிஸ்தானில் ரயிலுடன் பஸ் மோதியது: 30 பேர் பலி

பாகிஸ்தானில் அதிவேக ரயிலுடன் பஸ் மோதி விபத்து: 30 பேர் பலி

by Bella Dalima 29-02-2020 | 5:03 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் கன்த்ரா நகரில் ரயிலுடன் பயணிகள் பஸ் மோதி விபத்திற்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சிந்து மாகாணம் சுக்குர் மாவட்டம் ரோரி பகுதியில் உள்ள ஆளில்லா ரயில் கடவையை பயணிகள் பஸ் கடக்க முற்பட்ட போது அதிவேக ரயிலுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கி சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருந்த 'பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ்’ ரயில் ஆளில்லா ரயில் கடவையை கடக்க முயன்ற பஸ் மீது மின்னல் வேகத்தில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில், ரயிலின் முன்புறம் சிக்கிக்கொண்ட பஸ் தண்டவாளத்தில் 200 மீட்டர்கள் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 30 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சுக்குர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இந்த விபத்தின் போது பஸ்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்டர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.