திருத்தச்சட்டமானது குடியுரிமையை பறிப்பதற்கு அல்ல

இந்திய குடியுரிமை திருத்தச்சட்டமானது குடியுரிமை வழங்குவதற்கே; பறிப்பதற்கு அல்ல - அமித்ஷா

by Bella Dalima 29-02-2020 | 4:30 PM
Colombo (News 1st) இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்தவொரு இஸ்லாமியரும் தமது குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் - புவனேஸ்வரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான பொதுக்கூட்டம் நேற்று (28) இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின் போதே மத்திய உள்துறை அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்பி வருவதாகவும் பொது மக்களிடையே கலவரம் விளைவிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக டெல்லியில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட வன்முறையில் 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்திய குடியுரிமை திருத்தச்சட்டமானது குடியுரிமை வழங்குவதற்கான சட்டமே தவிர யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கு அல்ல என அமித்ஷா கூறியுள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் நோக்கிலேயே இந்த குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.