MCC ஆய்வுக் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

MCC தொடர்பில் ஆராயும் குழுவின் இடைக்கால அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பு

by Staff Writer 28-02-2020 | 3:26 PM
Colombo (News 1st) MCC எனப்படும் Millennium Challenge Corporation உடன்படிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமரினூடாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்படவுள்ள அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தௌிவுபடுத்தினார். மக்களுக்கு தெரியாமல் MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தவிர்ப்பதற்கு இந்த இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக கலாசாரம் உள்ளிட்ட துறைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விடயங்கள் இந்த ஒப்பந்தத்தில் காணப்படுவதாக விசாரணைக் குழு அறிவித்துள்ளது. இதனால் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாதிருப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் கூறியுள்ளார். எனினும், பாதகமான சரத்துக்களை உடன்படிக்கையிலிருந்து விலக்கியதன் பின்னர், MCC உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாட அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டிற்கு அமைய இந்த உடன்படிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எனவே, MCC உடன்படிக்கையை மீளாய்வு செய்வது தொடர்பில் அமெரிக்காவுடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.