MCC தற்காலிகமாக இடைநிறுத்தம்; திருத்தம் மேற்கொள்ளத் திட்டம்

by Staff Writer 28-02-2020 | 9:00 PM
Colombo (News 1st) MCC நிறுவனத்தின் திட்ட முன்மொழிவுகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஒப்பந்த விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த மாற்றங்களுக்கு MCC நிறுவனம் இணங்க மறுத்தால், ஒப்பந்தத்தை நிராகரிக்க வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது. பேராசிரியர் லலித்தசிறி குணருவான் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அண்மையில் பிரதமரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன அறிக்கையில் உள்ள விடயங்கள் தொடர்பில் தௌிவூட்டினார். MCC ஒப்பந்தத்தில் அரசியலமைப்பு மற்றும் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாக இடைக்காலக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதனை கைவிட அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டத்திற்கு எதிரான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தைப் பற்றி விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது எனினும், இது அமெரிக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் அல்ல. ஐக்கிய தேசியக் கட்சியினால் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம். அவர்களுடன் கலந்தாலோசித்தே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் கடுமையான மூலதன பற்றாக்குறையின் கீழ் நாம் வெளிநாட்டு உதவிகளைப் பெற்றால், மீள செலுத்த வேண்டிய தேவை ஏற்படாது. வட்டி செலுத்த வேண்டிய தேவை ஏற்படாது. அதனை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம். இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒத்துழைத்தால் இது தொடர்பில் மக்களுக்கு கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கி பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம்
என பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.