பயங்கரவாத தடைச்சட்டத்தை இதுவரை ஏன் நீக்கவில்லை?

பயங்கரவாத தடைச்சட்டத்தை இதுவரை இலங்கை ஏன் நீக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி

by Staff Writer 28-02-2020 | 7:38 PM
Colombo (News 1st) வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் ஐ.நா விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். பிரிவினைப் பயங்கரவாதம் சார்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் இன்று வரையில் இலங்கையில் ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை என அமைச்சர் தினேஷ் குணவர்தன பெருமையுடன் கூறியிருந்தாலும், 1979 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை இதுவரை இலங்கை ஏன் நீக்கவில்லை என்று சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். நல்லிணக்க சமரச ஆணைக்குழுக்களை நியமிப்போம் என்று 2010 இல் கூறிய கூற்றின் மறு உருவமே உள்ளக விசாரணை ஆணைக்குழுவை நியமிப்போம் என்று இலங்கை ஜெனிவாவில் தற்போது கூறியுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் ஒருமித்த கருத்தை உதாசீனம் செய்யும் இந்த செயற்பாடு சம்பந்தமாக போதுமான பதில் நடவடிக்கையை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும் என சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு சபையின் பரிந்துரையின் பேரில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இலங்கை தொடர்ந்தும் உறுப்புரிமை கொண்டு நிலைக்க வேண்டுமா என்பதை மீள் பரிசீலனை செய்ய முன்வர ​வேண்டும் என்ற கோரிக்கையை வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முன்வைத்துள்ளார்.