by Bella Dalima 28-02-2020 | 5:48 PM
Colombo (News 1st) டெல்லியில் இடம்பெற்ற வன்முறைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், நிலைமை சீராகி வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் இனவாத பதற்றத்தைத் தூண்டுவதில் ஆர்வமுள்ள குழுக்களின் நோக்கங்களுக்கு இரையாக வேண்டாம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
டெல்லியின் தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவாக ஆராய்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி பொலிஸின் மூத்த அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்லியில் தற்போது நிலைமை முன்னேற்றமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் மக்கள் கூட்டமாகக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த 36 மணித்தியாலத்தில் பெரியளவில் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என மத்திய உள்துறை அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் வடகிழக்கு பிராந்தியத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல் வன்முறையாக மாறியது.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்காக சுமார் 514 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடும் குற்றங்கள் குறித்து ஆராய இரண்டு சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை நியமித்துள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.