ஜனாதிபதியும் பாராளுமன்றமும் வெவ்வேறு பாதையில் பயணித்தால் நாட்டை மேம்படுத்த முடியாது - பிரதமர்

by Staff Writer 28-02-2020 | 8:44 PM
Colombo (News 1st) ஜனாதிபதியும் பாராளுமன்றமும் வெவ்வேறு பாதையில் பயணித்தால் நாட்டை மேம்படுத்த முடியாது எனவும் அவ்வாறான நிலைப்பாட்டை கடந்த 5 வருடங்களில் அவதானிக்க முடிந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். 19 ஆவது திருத்தத்துடன் ஜனாதிபதியும் பாராளுமன்றமும் இணைந்து செயற்பட வேண்டிய யுகமே தற்போது நிலவுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். ''இன்னும் சில நாட்களில் பாராளுமன்றம் கலைக்கப்படும். பொதுத்தேர்தல் நடைபெறும். தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் அரசாங்கத்தின் ஊடாகவே எதிர்கால பயணத்தை நாம் முன்னெடுக்க வேண்டிவரும்,'' என பிரதமர் சுட்டிக்காட்டினார். பத்தேகம - பிலகொட - பூர்வாராம விஹாரையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனைக் கூறினார்.