கொரோனா வைரஸ் தொற்றுள்ள நாடுகள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 28-02-2020 | 4:55 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், இன்று முதன்முறையாக நைஜீரியா, நெதர்லாந்து, லித்துவேனியா, பெலாரஸ், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் சீனா, இத்தாலி மற்றும் ஈரானுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இன்றைய நாளில் மாத்திரம் சீனாவில் 44 பேர் உயிரிழந்துள்ளதுடன், புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2788 ஆக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2800 ஆக அதிகரித்துள்ள நிலையில், தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 83,000 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று ஒரு "முக்கிய கட்டத்தை" எட்டியுள்ளதாகவும் உலகம் முழுவதும் பரவக்கூடிய நிலையுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. பல நாடுகளில் பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், வர்த்தக போக்குவரத்து குறையலாம் என்ற அச்சத்தால் பங்குச்சந்தை மதிப்புகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. சீனா மற்றும் ஹாங்காங்கில் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது ஜப்பான் மற்றும் ஈராக்கிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. ஜப்பானிலுள்ள 2 டிஸ்னி பூங்காக்கள் எதிர்வரும் 2 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தென்கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டியுள்ளது.