இணை அனுசரணையில் இருந்து விலகும் இலங்கை அரசின் தீர்மானத்திற்கு பல அமைப்புக்கள் கண்டனம்

by Staff Writer 28-02-2020 | 9:16 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின் 12 ஆவது சந்திப்பு சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சில அமைப்புக்கள் கண்டனம் வௌியிட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சர்வதேச நீதித்துறை வல்லுநர்கள் ஆணையமும் கவலை வெளியிட்டுள்ளது. இராணுவம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சட்டத்திற்கிணங்க குற்றங்களாக கருதப்படும் நடவடிக்கைகளை வெளிக்கொணர இலங்கை நீதித்துறை மற்றும் சட்ட நிறுவனங்கள் நீண்டகால இயலாமையை வெளிப்படுத்தியுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. பொறுப்புக்கூறலில் இருந்து இராணுவத்தை பாதுகாப்பதுடன், சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் முக்கிய பதவிகளில் அமர்த்த புதிய ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை நிலைமையை மேலும் மோசமாக்குவதாக சர்வதேச நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. நீதி மற்றும் பொறுப்புக்கூறலை மறுக்கும் நல்லிணக்கத்தை தமிழ் மக்கள் மறுதலிப்பதாகவும் ஆணையம் கூறியுள்ளது. இலங்கை தமிழ் மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதாக மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இயக்கம் தெரிவித்துள்ளது. உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் எதனையும் செய்யவில்லையெனவும் குறித்த இயக்கம் கூறியுள்ளது.