அரச ஊழியர்களுக்கு இடையூறு விளைவிப்பது அரசாங்க கணக்குகள் குழுவின் நோக்கம் அல்ல: ஜனாதிபதி தெரிவிப்பு

அரச ஊழியர்களுக்கு இடையூறு விளைவிப்பது அரசாங்க கணக்குகள் குழுவின் நோக்கம் அல்ல: ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2020 | 6:01 pm

Colombo (News 1st) அரச ஊழியர்களுக்கு இடையூறு விளைவிப்பது, அரசாங்க கணக்குகள் குழுவின் நோக்கம் அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு சிறந்த வினைத்திறனை வௌிப்படுத்திய அரச நிறுவனங்களுக்கான விருது வழங்கல் விழாவில் இன்று கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

2018 ஆம் ஆண்டில் 844 நிறுவனங்கள் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டதுடன், அதில் தெரிவு செய்யப்பட்ட 109 நிறுவனங்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

55 நிறுவனங்கள் தங்க விருதுகளையும் 23 நிறுவனங்கள் வெள்ளி விருதுகளையும் 31 நிறுவனங்கள் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டன.

சிறந்த வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்கிய நிறுவனங்களுக்கு ஜனாதிபதியால் விருதுகள் வழங்கப்பட்டன.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள தலைவரும், பணிப்பாளர் சபையினரும் எவ்வித வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொள்ளாது பணியாற்றுவதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

எனினும், இவர்கள் தொடர்பில் தொலைக்காட்சி செய்திகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எவ்வித பக்கசார்புமின்றி அரசியலமைப்பு பேரவை செயற்படுவது மிகச்சிறந்த விடயம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும், இதனை மீறும் போது ஆணைக்குழுக்கள் மீதான நம்பிக்கை அற்றுப்போகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி என்ற வகையில் அரச கொள்கை , இராஜதந்திர பொறிமுறைகளை செயற்படுத்துதல் தனக்குரிய இன்றியமையாத கடமை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்