30/1 மற்றும் 40/1 பிரேரணைகளிலிருந்து விலகுவதாக ஐ.நா பேரவையில் இலங்கை அறிவிப்பு

by Staff Writer 26-02-2020 | 6:11 PM
Colombo (News 1st) 30/1 மற்றும் 40/1 பிரேரணைகளின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வௌிவிவகார அமைச்சர் இதனை அறிவித்தார். உள்ளக பொறிமுறையினூடாக நாட்டில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வளிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள், அதன் பின்னர் இடம்பெற்ற நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு வழங்கிய தலைமைத்துவத்தை அடையாளம் கண்டுகொள்வதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் குழுவினர் தவறியுள்ளனர். இதன் பிரதிபலனாக மனித உரிமைகள் பேரவையில் 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக பாதகமான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. கடந்த அரசாங்கத்தினால் புரிந்துகொள்ள முடியாமற்போன பல விடயங்கள் காரணமாக மனித உரிமைகள் பேரவையில் 31/1 பிரேரணைக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது. நாடு என்ற வகையில் எமக்கிருந்த நிலைப்பாட்டிற்கு முரணாகவே அது இடம்பெற்றது. 30/1 பிரேரணை மாத்திரமல்ல, இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினரை அகௌரவத்திற்குட்படுத்தும் வகையில் OISL ஐ.நா அறிக்கை அமைந்திருந்தது. முதலில் பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவமாக, இலங்கை பாதுகாப்பு படையினரை உலகில் சுட்டிக்காட்ட முடியும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, பரணகம அறிக்கை மற்றும் பிரபு Nesby யினால் இங்கிலாந்தின் பிரபுக்களுக்கு முன்வைக்கப்பட்ட தகவல்களுக்கு முற்றிலும் மாறாகவே இது இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் அறிக்கைகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் இராஜதந்திர வியூகத்தில் இந்த விடயங்கள் அதிகளவில் மிகைப்படுத்தப்பட்டு காண்பிக்கப்பட்டன. எமது அரசியலமைப்பின் வரையறைகளுக்கு ஏற்ப இந்த பிரேரணையை செயற்படுத்த முடியாது. இது இலங்கை மற்றும் இலங்கைவாழ் மக்களின் இறைமைக்கு முரணானது. 30/1 பிரேரணைக்கு வழங்கியுள்ள இணை அனுசரணையை மீள ஆராய்வதற்கு பல காரணங்களுள்ளன. கடந்த அரசாங்கம் அனைத்து ஜனநாயக செயற்பாடுகளை மீறி செயற்பட்டமை முதலாவது விடயமாகும். பிரேரணைக்கான சட்டமூலத்தை முன்வைக்க முன்னரே கடந்த அரசாங்கம் இந்த பிரேரணைக்கு ஆதரவு வழங்கியது. சர்வதேச நிறுவனங்களுடன் விடயங்களை செயற்படுத்துவதற்கு பின்பற்ற வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில், அமைச்சரவை அனுமதி அவசியமில்லை என்று காண்பித்தமை மற்றுமொரு விடயமாகும். இணை அனுசரணை வழங்குவதன் பிரதிபலிப்புகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் எவ்வகையிலும் அறிவிக்கப்படவில்லை. அத்துடன், இந்த பிரரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமை இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் இடம்பெற்றுள்ளமை முக்கியமான விடயமாகும். அத்துடன் நிபுணர்கள், இராஜதந்திரிகள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்களினால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளமையும் இதற்கு பிரதான காரணமாகும். இதற்காக தன்னுடைய ஆலோசனையை பெற்றுக்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருந்தார். ஆகவே, இன்றும் கூட இணை அனுசரணை வழங்கிய இந்த செயற்பாடு, இலங்கை மக்களின் இறைமை மற்றும் கௌரவத்தை பாதிக்கும் விடயமாகவே அமைந்துள்ளது.
என தனது உரையில் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை நாளை (27) சமர்ப்பிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் தினேஷ் குணவர்தன அதற்கு பதிலளிக்கவுள்ளார். அத்துடன், எதிர்வரும் வௌ்ளிக்கிழமை மிச்செல் பெச்சலட் மற்றும் தினேஷ் குணவர்தனவிற்கு இடையே கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.