ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் சர்வாதிகாரம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் சர்வாதிகாரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக பசீர் சேகுதாவுத் குற்றச்சாட்டு 

by Staff Writer 26-02-2020 | 10:24 PM
Colombo (News 1st) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் தற்போது சர்வாதிகாரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் மூவரின் கழுத்தில் மாலைகள் உள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் ஒருவரின் கழுத்தில் மட்டும் மாலை ஒய்யாரமாக வீற்றிருப்பதாகவும் பசீர் சேகுதாவுத் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கட்சியில் ஒற்றை சர்வாதிகாரம் நிலைநிறுத்தப்பட்டிருப்பதையும் கட்சியின் உச்ச பீடத்தில் தலைவரைத் தவிர வேறு எவரும் கௌரவம் பெற தகுதியில்லை என்பதையும் குறிக்கின்றதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கழுத்தில் மலர் மாலைகள் அணிவிப்பது முக்கியமல்ல என்றாலும் மாலைகள் சொல்லும் செய்தியும் குறியீடும் அதன் உளவியல் வெளிப்பாடும் முக்கியமானவையாகும் என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரம் குறைந்த அளவிலேனும் பன்முகத்தன்மையுடன் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அவ்வருடம் வரைதான் இரண்டு தைரியமான குரல்கள் உள்ளே இருந்தன என்பதை மாலைகள் காட்டுவதாகவும் பசீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார்.