சாய்ந்தமருது நகரசபை: தீர்மானத்தை மீளப்பெற கோரிக்கை

சாய்ந்தமருது நகரசபை இரத்து: தீர்மானத்தை மீளப்பெற கோரிக்கை

by Staff Writer 26-02-2020 | 7:44 PM
Colombo (News 1st)  சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானியை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை மீளப்பெறுமாறு சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 14 ஆம் திகதி வெளியிடப்பட்டது. எனினும், ஒரு வாரம் கடப்பதற்கு முன்னர் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வர்த்தமானியை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்திருந்தார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ வழங்கிய வாக்குறுதிக்கு அமைய நகர சபையை அறிவிக்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும், சிலரின் விஷமத்தனமான பிரசாரங்கள் மற்றும் எதிர்ப்பினால் வர்த்தமானி அறிவிப்பு இடைநிறுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு புறம் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு மறுபுறம் வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டமை மக்களை மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு தள்ளியுள்ளதாகவும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினால் இல்லாதொழிக்கப்பட்டு தற்போதைய அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் இடைநிறுத்தப்பட்டுள்ள சாய்ந்தமருது நகர சபையை மீளப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர், உள்ளூராட்சிமன்ற அமைச்சர் மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோரிடம் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.