கினிகத்தேனையில் ஜீவன் தொண்டமான் அச்சுறுத்தியதாக தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 26-02-2020 | 8:50 PM
Colombo (News 1st) கினிகத்தேனை, தியகல பகுதி மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவர் ஜீவன் தொண்டமான் அச்சுறுத்தியதாக தெரிவித்து மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கினிகத்தேனை, தியகல பகுதிக்கு நேற்றிரவு சென்ற ஜீவன் தொண்டமான், அப்பகுதியிலுள்ள மக்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தியகல பகுதியிலுள்ள மைதானமொன்றை முத்தையா பிரபாகரனின் உதவியுடன் புனரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வட்டவலை பொலிஸாரிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. மைதானமொன்றை புனரமைக்கும் விடயத்தில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் ஜீவன் தொண்டமான் இருந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை ஜீவன் தொண்டமானும் மற்றுமொருவரும் இணைந்து தடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இரு தரப்பினரையும் அழைத்து பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், தற்போது பிரச்சினை சமரசப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.