ஐரோப்பிய நாடுகளையும் விட்டுவைக்காத கொரோனா

ஐரோப்பிய நாடுகளையும் விட்டுவைக்காத கொரோனா

by Staff Writer 26-02-2020 | 8:42 AM
Colombo (News 1st) தமது நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நாடுகள் பல அறிவித்துள்ளன. சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அண்மையில் இத்தாலி, அல்ஜீரியா மற்றும் வட ஆபிரிக்காவுக்கு சென்று நாடு திரும்பிய அவுஸ்திரியா, குரோசியா மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவலினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. இத்தாலியில் கடந்த 3 நாட்களுக்குள் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதுடன் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸிற்கு எதிரான முன்னெடுப்புக்கள் வலுவிழந்துள்ளதாக பாரிஸ் மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொடர்பிலான விழிப்புணர்வும் பயமும் மக்களிடம் குறைவடைந்துள்ளதாகவும் அயல் நாடான இத்தாலியில் 283 கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பிரெஞ்ச் ஊடகங்கள் நேற்று செய்தி வௌியிட்டிருந்தன. இதேவேளை, ஸ்பெயின் தலைநகரமான பார்சிலோனாவில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஈரானிய பிரதி சுகாதார அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 15 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.