அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கத்தினரின் எதிர்ப்பு நடவடிக்கை நிறைவு

by Staff Writer 26-02-2020 | 4:08 PM
Colombo (News 1st) அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கத்தினரின் எதிர்ப்பு நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளது. எனினும், நாளை (27) முதல் சட்டப்படி வேலையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 5 நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 6 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறையின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்ல - பெலவத்த பகுதியில் 174 ஆம் இலக்க பஸ் மார்க்கத்திலாக போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது. இதேநேரம், ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையால் பாடசாலைகளின் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையால் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையும் குறைவடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பிலுள்ள அநேகமான பாடசாலைகள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் சேவையை தொழில்முறை சேவையாக மாற்றுதல், இடைக்கால சம்பள சுற்றறிக்கை வழங்குதல், கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்கீடு, பாடசாலை பராமரிப்பிற்காக பெற்றோரிடமிருந்து பணம் சேகரிப்பதைத் தவிர்த்தல், 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் சேவையில் இணைந்த ஆசிரியர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். 18 ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இன்று பெலவத்தை - புத்ததாச விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருந்து, கல்வி அமைச்சு அமைந்துள்ள இசுறுபாயவிற்கு பேரணியாக சென்றனர். கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தையை, இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நிராகரித்தனர். நாளை (27) முதல் சட்டப்படி வேலை செய்யும் தீர்மானத்துடன் ஆசிரியர் அதிபர்களின் இன்றைய போராட்டம் முடிவுக்கு வந்தது. அத்துடன், மார்ச் 16 ஆம் திகதியில் இருந்து 5 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர். இதேவேளை, ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி இன்று யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு ​போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஏனைய செய்திகள்