முதலாம் தவணை பரீட்சையை நடத்தாமல் இருக்க தீர்மானம்

எதிர்வரும் காலங்களில் முதலாம் தவணை பரீட்சையை நடத்தாமல் இருக்க தீர்மானம்

by Staff Writer 25-02-2020 | 7:22 PM
Colombo (News 1st) எதிர்வரும் காலங்களில் அரச பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சையை நடத்தாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. விளையாட்டு உள்ளிட்ட ஏனைய இணை பாடவிதான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து அரச பாடசாலைகளிலும் முதலாம் தவணையில் விளையாட்டு, கல்விச்சுற்றுலா, கண்காட்சி உள்ளிட்ட பல இணை பாடவிதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால், பெரும்பாலான மாணவர்கள் பரீட்சைக்கு தயார் நிலையில் இருப்பதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், சில மாணவர்கள் இணை பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபட்டால் பரீட்சையில் தோற்ற முடியாமற்போகும் என அஞ்சுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் தவணை பரீட்சை காரணமாக பெற்றோர்கள் மாணவர்களை இணை பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இரண்டாம் மற்றும் இறுதித் தவணைகளில் பரீட்சையை நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இம்முறை திட்டமிடப்பட்டவாறு முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்