மின்சார மாஃபியா: இலங்கை மின்சார சபைக்கு 100 பில்லியன் ரூபா நட்டம்

மின்சார மாஃபியா: இலங்கை மின்சார சபைக்கு 100 பில்லியன் ரூபா நட்டம்

எழுத்தாளர் Staff Writer

25 Feb, 2020 | 8:15 pm

Colombo (News 1st) நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தின் பின்னால் உள்ள மாஃபியா தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்து பல விடயங்களை வௌிக்கொணர்ந்துள்ளது.

தற்போதைய வானிலையை சாதகமாக்கிக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ஒரு சிலர் மாத்திரம் வழமைக்கு மாறாக இலாபமீட்டும் நிலையில் மக்களின் பணத்தில் இயங்கும் இலங்கை மின்சார சபையின் இந்த வருட நட்டம் 100 பில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

வறட்சியிலும் நாம் தொடர்ந்தும் மின்சாரத்தை விநியோகிப்போம். அதேபோன்று, விலை சற்று அதிகரிக்கப்படலாம். அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படலாம். கடந்த ஐந்து வருடங்களை எடுத்துக்கொண்டால் ஒரு மின் உற்பத்தி நிலையமேனும் அமைக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இனிமேல் அமைக்க முடியாதோ என்ற சந்தேகமும் இருந்தது. இலங்கையின் முதலாவது LNG சூழல் நேய மின் உற்பத்தி நிலையத்தை கெரவலப்பிட்டியவில் இந்த வருடம் ஆரம்பிப்போம். அது இரண்டு வருடங்களில் பூர்த்தியாகும். அடுத்ததாக மேலும் சில மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்போம். 2023 ஆம் ஆண்டு நாம் மின்சார சபைக்கு இலாபத்தைப் பெற்றுக்கொடுப்போம்

என்று கூறிய அமைச்சரின் நோக்கம் சிறந்தது.

எனினும், மின்சார சபை நட்டமடைவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு இல்லையா?

அமைச்சர் அமரவீர கூறுகின்ற 300 மெகாவாட் LNG மின் உற்பத்தி நிலையம் சில வருடங்களாக மக்களுக்கு காண்பிக்கப்பட்ட கனவுத் திட்டமாகும்.

இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு LNG-யை வழங்க, இன்னமும் அதனை விநியோகிக்க, களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகள் எமது நாட்டில் இல்லை.

ஆகவே, முதலில் டீசல் அல்லது உலை எண்ணெய் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு பின்னர் LNG உற்பத்தி நிலையமாக மாற்றப்படுகிறது.

கெரவலப்பிட்டியவில் இந்த மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான விலை மனு தொடர்ச்சியாக ஊழல் இடம்பெற்ற மிகவும் மோசடியான வழிமுறையின் கீழ் வழங்கப்பட்ட ஒன்றாகும்.

கடந்த ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்த மின் உற்பத்தி நிலையத்தை இலங்கை மின்சார சபை அதிகப் பங்குகளை வகிக்கும் இலங்கை ட்ரான்ஸ்ஃபார்மர் நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

தகைமை பெற்ற நாட்டிற்கு அனுகூலம் வழங்கக்கூடிய அனுபவம் உள்ள பல நிறுவனங்களை விலைமனு செயற்பாட்டின்போது திட்டமிட்ட வகையில் அகற்றியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

வரிகளை உள்ளடக்காது இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சார அலகின் கட்டணத்தை ஏனைய நிறுவனங்களை விட குறைத்து காண்பிப்பதற்கு இலங்கை ட்ரான்ஸ்ஃபார்மர் நிறுவனம் இறுதியில் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த விலைமனு செயற்பாட்டினை ஏற்கனவே பல தரப்புக்கள் ஆட்சேபனைக்கு உட்படுத்தியுள்ள நிலையில், மின்உற்பத்தி நிலையமொன்றை அமைக்கவுள்ளதாக அமைச்சர் வழங்கும் வாக்குறுதிக்கு அடிப்படை என்ன?

ஏற்கனவே கெரவலப்பிட்டியவில் உள்ள இத்தகைய இரண்டு சுழல் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டு உத்தேச திட்டம் தொடர்பிலும் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன.

கெரவலப்பிட்டியவில் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக வெஸ்ட் காஸ்ட் பவர் எனும் பெயரில் புதிய நிறுவனமொன்று 2006 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் 50 வீத பங்குகள் அரசாங்கத்திற்கும் 18.2 வீத பங்குகள் மின்சார சபைக்கு சொந்தமான இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்கும் 27.1 வீத பங்குகள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் 4.8 வீத பங்குகள் லக் தனவி நிறுவனத்திற்கும் பகிரப்பட்டிருந்தன.

இதற்கமைய, இலங்கை மின்சார சபைக்கே இந்த நிறுவன இலாபத்தில் அதிகப் பங்கு கிடைக்க வேண்டும்.

எனினும், இந்த நிறுவனத்தின் இலாபம் பகிரப்பட்ட விதத்தில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதை Verité Research நிறுவனம் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி 2018 ஆம் ஆண்டு ஜுலை 28 ஆம் திகதி நியூஸ்ஃபெஸ்ட் வௌிக்கொணர்ந்தது.

இந்த வௌிக்கொணர்வின் பிரகாரம், வெஸ்ட் காஸ்ட் நிறுவனத்தின் 4.8 வீத பங்குகளை மாத்திரம் கொண்டிருந்த லக் தனவி நிறுவனத்திற்கு 39.75 வீத இலாபம் பகிரப்பட்டிருந்தது.

2016 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி செலுத்தப்பட்ட இலாபப் பங்கு தொடர்பிலான அறிக்கை கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தில் ஆராயப்பட்டபோது, மின்சார சபைக்கு 7184 மில்லியன் ரூபா இலாபம் செலுத்தப்படவேண்டியிருந்தது.

எனினும், மின்சார சபையின் கணக்கறிக்கைகளுக்கு அமைய 6952 மில்லியன் ரூபாவே கிடைத்திருந்தது.

எஞ்சிய தொகை யாருடைய கைகளுக்கு சென்றது?

கோப் குழுவிலும் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த கொடுக்கல் வாங்கல் ஊடாகவே பெருமளவு பணம் வௌியே கசிந்தது.

U.D.ஜயவர்தன, M.J.M.N.மரிக்கார் மற்றும் ரவீந்திர K.பிட்டிகலகே ஆகிய மூன்று பெயர்கள் இந்த கொடுக்கல் வாங்கல்களின் போது தொடர்ச்சியாக பேசப்பட்டாலும், மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் தற்போதைய ஆட்சியிலும் அவர்கள் இந்த வர்த்தக செயற்பாடுகளில் எவ்வித தடையும் இன்றி செயற்பட்டு வருகின்றனர்.

இவர்கள் செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை நடத்தப்படாமைக்கு காரணம் என்ன?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்