ஹார்வி வைன்ஸ்டைன் பாலியல் குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் துஷ்பிரயோக வழக்கு: ஹொலிவுட் தயாரிப்பாளா் ஹார்வி வைன்ஸ்டைன் குற்றவாளி என தீர்ப்பு

by Bella Dalima 25-02-2020 | 4:03 PM
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் ஹொலிவுட் திரைப்பட தயாரிப்பாளா் ஹார்வி வைன்ஸ்டைன் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பு பெண் உதவியாளரை பாலியல் ரீதியாக தாக்கியதாகவும் 2013-ஆம் ஆண்டு நடிகை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று நேற்று (24) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஹார்வி வைன்ஸ்டைனுக்கு எதிரான தீவிர குற்றச்சாட்டுகளில் பெரும்பான்மையானவை நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. வழக்கு விசாரணை 5 நாட்கள் நடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் ஹார்வி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 'Me Too' புகாா் முறையில் ஹார்வி வைன்ஸ்டைன் மீது பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டுகள் திரைத்துறையைச் சோ்ந்த சில பெண்களால் கடந்த 2017-இல் முன்வைக்கப்பட்டன. ஹார்வி வைன்ஸ்டைன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள வழக்குகளைத் தொடுத்த பெண்கள் தவிர்த்து, மேலும் சிலரும் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.