கன்னியா வெந்நீரூற்று காணி விவகாரம்:  விகாராதிபதியின் இடைபுகு மனு தள்ளுபடி

கன்னியா வெந்நீரூற்று காணி விவகாரம்:  விகாராதிபதியின் இடைபுகு மனு தள்ளுபடி

எழுத்தாளர் Staff Writer

25 Feb, 2020 | 9:02 pm

Colombo (News 1st)  திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணி விவகாரத்தின் கட்சிக்காரராக இணைத்துக்கொள்ளுமாறு வில்கம் விகாரையின் விகாராதிபதியால் தாக்கல் செய்யப்பட்ட இடைபுகு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த இடைபுகு மனு தொடர்பான கட்டளையை பிறப்பிப்பதற்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு இன்று (25) எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், வில்கம் விகாராதிபதியை கட்சிக்காரராக ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் இடைபுகு மனுவை தள்ளுபடி செய்யுமாறும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், விகாராதிபதியை கட்சிக்காரராக இணைத்துக்கொள்ள ஆட்சேபனை இல்லை என அரச தரப்பு சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கன்னியா வெந்நீருற்று அதனை அண்மித்துள்ள காணிக்குரிய உரிமை மற்றும் உரித்துக்கான ஆவணத்தை விகாராதிபதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

மாறாக , மனுதாரரான பெண், பிள்ளையார் கோவில் காணி தனக்கு உரித்தானது என்பதை மன்றுக்கு அறிவித்துள்ளார்.

மனுவின் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் மனுதாரர்களான அரசாங்க அதிபரும், தொல்பொருள் ஆணையாளர் நாயகமும் கன்னியா வெந்நீரூற்று தங்களின் கட்டுப்பாட்டு பிரதேசம் என வாதிட்டுள்ளனர்.

எனினும் இந்தக் காணி, வில்கம் விகாரைக்கு சொந்தமானது என்றோ, விகாராதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றோ இவர்கள் மன்றுக்கு அறிவிக்கவில்லை.

இதன் பின்னர், எவ்வித ஆவண உரித்தும் இல்லாது கட்சிக்காரராக இணைக்கும்படி கோரிய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ள முடியாத விண்ணப்பம் என நீதிமன்றம் தீர்மானித்து, விகாராதிபதியின் இடைபுகு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

இந்த காணி, மனுதாரரான பெண்ணுடையதா அல்லது தொல்பொருள் திணைக்களத்தினுடையதா என்பது தொடர்பான பிரதான விசாரணையை மேற்கொள்ளுமாறு நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சேபனை மற்றும் எதிர் ஆட்சேபனைகளை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்குமாறு அறிவித்து இருதரப்பு எழுத்துமூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்