வேட்புமனு குழுவொன்றை நியமித்துள்ள சுதந்திரக் கட்சி

வேட்பாளர்களை தெரிவு செய்ய வேட்புமனு குழுவொன்றை நியமித்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

by Staff Writer 22-02-2020 | 4:01 PM
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்குரிய வேட்புமனு குழுவொன்றை நியமித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. வெற்றிடம் காணப்படும் தொகுதிகளுக்கு இந்த குழுவினூடாக புதியவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், கட்சி உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார். இதேவேளை, சமகி ஜனபலவேகய கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கான இறுதி தீர்மானம் கட்சியில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனினும், தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே உத்தியோகபூர்வ சின்னம் அறிவிக்கப்படும் என ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டார். ஹெல உருமய, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான கட்சி, திகாம்பரம் தலைமையிலான கட்சி உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக தங்களுடன் கைகோர்த்துள்ளதாக 'சமகி ஜனபலவேகய' கூட்டணியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார சுட்டிக்காட்டியுனார்.