தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு அறிவிப்பு

தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு அறிவிப்பு

தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2020 | 7:15 pm

Colombo (News 1st) 30/1 மற்றும் 40/1 தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் Elisabeth Tichy-Fisslberger-ஐ ஜெனிவா நகரில் சந்தித்த வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவரை ஜெனிவா நகரில் நேற்று (21) சந்தித்த வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னர் பேரவையின் தலைவரிடம் வௌிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் தினேஸ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் ரவிநாத ஆரியசிங்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

43 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கும் அமைச்சர் தினேஷ் குணவர்தன, எதிர்வரும் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளதுடன், அதன்போது இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனவும் வௌிவிவகார செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரையும் சந்திக்கவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்