எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் அரசியல் ஒப்பந்தம்: வசந்த சமரசிங்க வௌிக்கொணர்வு

எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் அரசியல் ஒப்பந்தம்: வசந்த சமரசிங்க வௌிக்கொணர்வு

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2020 | 8:24 pm

Colombo (News 1st)  எயார்பஸ் மோசடி தற்போது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

எயார்பஸ் கொள்வனவிற்கான கொடுக்கல் வாங்கல் மற்றும் அதனை இரத்து செய்தபோது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு கொடுக்கல் வாங்கல்களிலும் நாட்டு மக்களின் பணமே மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மற்றுமொரு விடயத்தை வௌிக்கொணர்ந்தார்.

கபில சந்திரசேனவின் கணக்கிலிருந்து 140 மில்லியன் நிமல் பெரேராவின் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. நிமல் பெரேரா என்பவர் யார்? அவர் பணிப்பாளர் சபையிலும் இல்லை. அமைச்சரவையிலும் இல்லை. அவர் எயார் லங்காவுடன் தொடர்புபட்டவரும் அல்ல. அவரின் கணக்கிற்கு ஏன் பணம் அனுப்பப்பட்டது? இதற்கு முன்னரும் நிமல் பெரேராவின் கணக்கிற்கு 600 இலட்சம் ரூபா அனுப்பப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் தான் ஒரு சதத்தையேனும் பெறவில்லை எனவும், அது யாருக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து தெரியாது எனவும் அவர் பதிலளித்திருந்தார். அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டால் அந்தத் தகவல்கள் வௌிவரும்

என அனுரகுமார குறிப்பிட்டார்.

நிமல் பெரேரா இது குறித்து நாட்டிற்கு விளக்கமளிக்க வேண்டும் அல்லது அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அனுரகுமார வலியுறுத்தினார்.

இந்த 1400 இலட்சம் ரூபாவில் நிமல் பெரேரா ஒரு சதத்தையேனும் பயன்படுத்தவில்லை என்பதை நான் நன்கறிவேன். அந்த உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டது. 3 பில்லியன் டொலர் சொத்துள்ள எயார் லங்காவினால் அந்த சுமையை சுமக்க முடியாது. அது பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது. இதனை இரத்து செய்ய நேரிடும் என்பது உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட சந்தர்ப்பத்திலேயே தெரிந்த விடயமாகும். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதனை இரத்து செய்தது. அப்போது அஜித் டயஸ் என்பவரே எயார் லங்காவின் தலைவராக செயற்பட்டார். ரணில் விக்ரமசிங்கவின் நண்பர் சுரேன் ரத்வத்த பிரதம நிறைவேற்றதிகாரியாக செயற்பட்டார். சரித ரத்வத்தவின் தம்பி ரணிலின் சகாக்களைப் பயன்படுத்தி இரத்து செய்தார். இரத்து செய்வதற்கு 115.7 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டதை எமது சகோதரர் ஹந்துன்னெத்தி கோப் குழுவில் வௌிக்கொணர்ந்தார். இரத்து செய்வதற்காக 1700 கோடி ரூபா செலுத்தப்பட்டுள்ளது. அது எவ்வாறு இரத்து செய்யப்பட்டது? விமான சேவைகள் அமைச்சராகவிருந்த கபீர் ஹாசிமிற்கு தெரியாது. அமைச்சரவைக்குத் தெரியாது. சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கும் தெரியாது. கொள்வனவின்போதும் தரகுப் பணம் பெறப்பட்டுள்ளது. இரத்து செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் 1700 கோடி ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது

என அனுரகுமார தகவல் வௌியிட்டார்.

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவின் பாரியாருடைய வங்கிக் கணக்கிலிருந்து 8 இலட்சம் டொலர் பணம், நிமல் பெரேராவின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் தெரியவந்தது.

நிமல் பெரெரா, நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் நிதித் தூய்தாக்கல் வழக்கின் சாட்சியாளராவார்.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கடந்த வாரம் நடைபெற்ற நீதிமன்ற நடவடிக்கையின்போது வௌிப்பட்ட விடயங்களுக்கும் தமக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இது குறித்து சட்ட ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நாமல் ராஜபக்ஸவிற்கு பணம் எங்கிருந்து வந்ததென ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க கேள்வி எழுப்பினார்.

அஜித் நிவாட் கப்ரால், மஹிந்த ராஜபக்ஸ ஆகிய அனைவரும் அறிந்திருந்த நிலையில் தான் கபில சந்திரசேன திருடியதாக வசந்த சமரசிங்க குற்றம் சாட்டினார்.

கப்ரால் மூடிமறைக்க முயற்சித்தாலும் நாமலின் வங்கிக் கணக்கிற்கு பணம் எவ்வாறு சென்றது என மூடிமறைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து ஏற்றுமதி திணைக்களம் அந்நாட்டின் ஊழல் பிரிவிற்கு எமது நாட்டின் நிறுவனம் மோசடி கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டதை ஆராயுமாறு முறைப்பாடு செய்யவுள்ளது. அதன் மூலமாகத்தான் இது வௌிப்படும். 4 பில்லியன் டொலர்களை வழங்கி அந்த விடயத்தினை சமரசப்படுத்தினர். அதன் பின்னர் இலங்கைக்கு வந்த தகவலின் பிரகாரம், கபில சந்திரசேனவும் அவரது பாரியாரும் தமது கடவுச்சீட்டுத் தடையை விலக்குமாறு நீதிமன்றத்தை நாடினர். அங்கு சென்றதன் பின்னர், மறுநாள் சட்ட மா அதிபர் அவர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். இதற்கு முன்னரும் கபீர் ஹாசிம் அமைச்சராக இருந்த காலத்தில் முறைப்பாடு விசாரணை செய்யப்பட்டு வௌிநாடு செல்வதைத் தடுக்கும் நோக்கில் கடவுச்சீட்டிற்கு தடை விதிக்கப்பட்து. யார் இதனை மூடி மறைத்தது? ரணில் தான். அன்று வௌிக்கொணரப்பட்டிருந்தால் மஹிந்த, நாமல், ஷிரந்தி ஆகியோர் அகப்பட்டிருப்பார்கள்.

என வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்